மக்களவைக்கு வராமல் புறக்கணித்துள்ள அவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து மீண்டும் அவைக்கு வருமாறு எம்பிக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்று அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், காங்கிரஸ் மக்களவை தலைவர் அதீர் ரஞ்சன், கேள்வி நேரத்துக்கு தலைமை வகித்த பாஜக தலைவர் ராஜேந்திர அகர்வாலிடம், “ஓம் பிர்லாவை தயவு செய்து அவரின் நாற்காலியில் வந்து அமர சொல்லுங்கள். கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை பேசி தீர்த்து வைப்போம். சபாநாயகர் எங்கள் பாதுகாவலர், அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்கள் கருத்துக்களை அவர் முன் தெரிவிப்போம்” என்றார்.
இந்த தகவலை அவை தலைவருக்கு தெரிவிப்போம் என்றார் அகர்வால்.
பின்னர், நாடாளுமன்ற அவை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காங்கிரஸ் மக்களவை தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாடு கட்சி எம்பி ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அவைக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை வைத்தனர்.