‘நீங்கள் ஒரு பெண்… உங்களுக்கு எதுவும் தெரியாது’ என பெண் எம்.எல்.ஏ. ஒருவர் குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் அரசின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தை அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதாதளம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று சட்டசபையில் அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கை தொடர்பாகவும், முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதில் ரேகாதேவி உட்பட பெண் எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். பெண் எம்.எல்.ஏ.க்களும் தனக்கு எதிராக கோஷமிட்டதைப்பார்த்த நிதிஷ்குமார் கோபத்தின் உச்சிக்கே சென்றார். இருக்கையில் இருந்து எழுந்து ரேகா தேவியை பார்த்து கை விரல்களை நீட்டி ஆவேசமாக பேசினார்.
'நீங்கள் ஒரு பெண். நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள் கிடைத்தது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு பெண், இன்னும் உங்களுக்கு எதுவும் தெரியாது' என சத்தமாக பேசினார்.
நிதிஷ்குமாருக்கு கிடைத்த பதிலடி
நிதிஷ்குமாரின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த ரேகா தேவி, ‘இடஒதுக்கீடு தொடர்பாக எனக்கு தெரிந்த விஷயத்தை பேசினேன். பெண்களின் அதிகாரம் பற்றி பேசும் முதலமைச்சர் நிதிஷ்குமார், பெண்ணான என்னிடம் இப்படி பேசுகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். வயதாகிவிட்டதால் ஆட்சி செய்ய முடியாமல் நிதிஷ்குமார் திணறி வருகிறார்’ என்று காட்டமாக பதில் அளித்தார் ரேகா தேவி.
’இதுபோன்று பேசுவது நிதிஷ்குமாருக்கு வாடிக்கையாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்னால் பாஜகவை சேர்ந்த பழங்குடியின பெண் எம்எல்ஏவின் அழகு பற்றி இழிவான முறையில் பேசினார். தற்போது ஒரு தலித் பெண் எம்எல்ஏ குறித்து தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.’ என்றார் பீகார் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்.
அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட நிதிஷ்குமார், தொடர்ந்து பெண்கள் குறித்து இப்படி பேசிவருவது அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.