பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு!

பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு!
Published on

“வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம்” என்று தெரிவித்துள்ள மல்யுத்த வீரர்கள், ”இந்தியா கேட்டில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பாலியல் குற்றச்சாட்டினார். பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும் என்றும், அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டது. விசாரணை நடத்தவும் குழு அமைக்கப்பட்டது.

அதேபோல், கடந்த மே-28ஆம் தேதி அன்று புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களைத் தடுத்து கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இதனால் ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசிவிடுவோம் என வீராங்கனைகள் அறிவித்துள்ளார்கள்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் மூன்று பக்க அறிக்கையை பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ளார். அதில், "வீராங்கனைகளை தங்கள் மகள் என அழைக்கும் பிரதமர் மோடி, அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எதையும் கேட்கவில்லை. நாங்கள் பாலியல் குற்றச்சாட்டு சம்பவத்தில் நீதி கோரியதை தவிர வேறு என்ன செய்தோம்? பிறகு ஏன் எங்களைக் குற்றவாளிகள் போல் நடத்துகிறீர்கள்? போராட்டக்களத்தில் நாங்கள் கைதானபோது எங்கள் புகைப்படங்கள் மார்ப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் என யாரும் செவி சாய்க்கவில்லை. எங்கள் பதக்கங்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை. இது எங்கள் புனிதமான உழைப்பின் மூலம் கிடைத்தது, எனவே நாங்கள் இன்று இந்த பதக்கங்களை புனிதமான கங்கை நதியில் தூக்கி எறியப் போகிறோம்" என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் வீரர்கள் விடுத்துள்ள இந்த அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com