மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பெண் ஒருவர் சாலையோர நடைபாதையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள கொய்லா பதக்கில் கடந்த புதன்கிழமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பை பொறுக்கும் தொழிலாளியான லோகேஷ் என்ற இளைஞர், பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணை மது குடிக்க வைத்துள்ளார். பின்னர் மதுபோதையில் அந்த பெண்ணை சாலையோர நடைபாதையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பிறகு அவர் தப்பி ஓடிவிட்டிருக்கிறார்.
இதை நேரில் பார்த்த பொதுமக்கள் இந்த சம்பவத்தை தடுப்பதற்கு பதிலாக வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து, அவரிடம் புகாரை எழுதி வாங்கியுள்ளனர் அம்மாநில காவல் துறையினர். தற்போது புகாரின் பேரில் லோகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ்வின் சொந்த தொகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
“புனித நகரமான உஜ்ஜைனியில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது வெட்கக்கேடானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டும்” என மத்திய பிரதேச மாநில காங்கிரசார் விமர்சித்துள்ளனர்.