உத்தரபிரதேசத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பாஹ்ரைச் மாவட்டம். அதில் மாசி என்ற வட்டாரத்தில் மயான அமைதியும் பீதியும் படர்ந்துகிடக்கின்றன. காரணம் கடந்த சில நாட்களில் 9 பேர் ஓநாய்களால் கொல்லப்பட்டுள்ளனர். 24 பேர் காயத்துடன் பிழைத்துள்ளனர்.
டேராடூனில் இருந்து கிழக்கு உபியில் வடக்குப் புறமாக இருக்கும் பல்ராம்பூர் ஸ்ராவஸ்தி, பாஹ்ரைச் போன்ற இடங்கள் இமயமலையின் அடிப்பகுதியில் வருகிறவை. நேபாளத்தில் இருந்து இறங்கும் ஆறுகள் பல இங்குள்ளன. உருண்டைக் கற்பாறைகள் நிறைந்த ஆற்றங்கரைகள் ஓநாய்களின் இருப்பிடமாக உள்ளன.
இந்த ஓநாய்கள் ஊருக்குள் பொதுவாக வருவதில்லை. அவை ஆற்றைச் சுற்றிலும் உள்ள வறண்ட பள்ளங்களில் காட்டுப்பகுதியில் வாழ்கின்றன. சமீபத்தில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் இவற்றின் வாழ்விடங்களிலும் நீர் புகுந்து, இவை இடம் பெயர்ந்து ஊர்ப்பகுதிக்கு வந்ததில் ஒரு சில ஓநாய்கள் இப்படி மனித வேட்டையில் இறங்கிவிட்டதாக வனவிலங்குத் துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஏற்கெனவே பல்ராம் பூர் மாவட்டத்தில் 2002- 2005 காலகட்டத்தில் பலர் இந்த ஓநாய்களால் தாக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளன. அதில் 53 பேருக்கு 50,000 ரூ அரசு இழப்பீடு வழங்கி உள்ளது.
தற்போது மாநில தலைமை வனவிலங்கு அலுவலர், பாஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களைச் சுட்டுப் பிடிக்க உத்தரவு வழங்கி உள்ளார். ஏராளமான வனவிலங்கு, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பல குழுக்களாக இறங்கி ஓநாய்களைத் தேடிவருகின்றனர். நேற்று மட்டும் மூன்று ஒநாய்களைப் பிடித்துள்ளனர்.
பொதுமக்களிடம் பெரும் பீதி நிலவுவதால் பள்ளிகள் மூடப்பட்டு, நடமாடவே அவர்கள் அஞ்சுகிறார்கள். பெரும்பாலும் பாதுகாப்பற்ற கிராமப்புற வீடுகள்தான் அங்கு அதிகம். இரவெல்லாம் தூங்காமல் கிராமங்களில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்து மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.
ஓநாய்களின் ராஜ்யத்தில் வாழ்ந்தால் இரவில் உறக்கம்வருமா என்ன?