மும்பையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடத்தி வரும் ஹோட்டலில் வேட்டி சட்டையுடன் சாப்பிட சென்றவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ஆடை விற்பனை, ஹோட்டல் தொழில்களை இந்திய முழுக்க நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் "One 8 Commune" என்ற ஹோட்டல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல், அடுத்தடுத்து மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் அதன் கிளைகள் திறக்கப்பட்டன.
விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவ்வப்போது அந்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்தும் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
இந்த நிலையில் மதுரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான ராம் என்பவர் மும்பைக்கு சென்றபோது, விராட் கோலியின் ஹோட்டலில் உணவருந்த சென்றுள்ளார். நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தாலும் அந்த ஹோட்டல் உணவை தவிர்த்து, விராட் கோலியின் பெயருக்காகவே சாப்பிட சென்றுள்ளார்.
இதற்காக பிரத்யேகமாக புதிய வேட்டி, சட்டை அணிந்து சென்றுள்ளார். அவரை, ஹோட்டல் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரை அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு, வேட்டி - சட்டைக்கு அனுமதியில்லை என்று கூறி வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து ஹோட்டல் முன்பாக நின்று, இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.