விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை?

விக்ரம் லேண்டர்
விக்ரம் லேண்டர்
Published on

சந்திரயான்-3 விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்படுவது சந்தேகமே என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள இஸ்ரோ அனுப்பிய ‘சந்திரயான்-3’ விண்கலம், கடந்த மாதம் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. விண்கலத்தின் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவா், நிலவின் பரப்பில் 105 மீட்டா்வரை சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.

நிலவில் கந்தகம், ஆக்சிஜன், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான் ஆகிய ஒன்பது தனிமங்கள் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

நிலவின் தரையில் 15 செ.மீ. ஆழத்துக்குள் பல்வேறு வெப்பநிலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

விக்ரம் லேண்டரை 40 மீட்டா் வரை மேலே எழுப்பி மறுபடியும் தரையில் விழவைத்தும் விஞ்ஞானிகள் அசத்தினர்.

இந்நிலையில், விக்ரம் லேண்டா், பிரக்யான் ரோவரின் அனைத்து ஆய்வுப் பணிகளும் முடிவுற்றதாகவும், அதன் தகவல்கள் அனைத்தும் பூமியிலுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இஸ்ரோ கடந்த 4ஆம் தேதி அறிவித்தது.

நிலவில் சூரியன் மறைவதையொட்டி அன்றைய நாளே, லேண்டா், ரோவா் இரண்டும் உறக்கநிலைக்கு வைக்கப்பட்டன.

மீண்டும் நிலவின் பகல் பொழுது நேற்று மீண்டும் தொடங்கியநிலையில், லேண்டா், ரோவரின் பேட்டரிக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஒளி மூலம் கிடைக்கப் பெறும் என்பதால், மீண்டும் தொடா்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு தொடா்பை ஏற்படுத்த நேற்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா் மற்றும் பிரக்யான் ரோவரின் நிலை குறித்து அறிய, அதனுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போதுவரை எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை. தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், “சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும் பிரக்யான் ரோவரும் மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பு இல்லை. இருந்தாலும் விஞ்ஞானிகள் முயற்சிசெய்து வருகின்றனர். தொடர்ந்து இரவில் செயல்படுவதற்கான விண்கலங்களைத் தயாரிப்பதற்கு இந்த தொழில்நுட்பம் போதுமானதாக இருக்காது.” என்று கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com