உத்தராகண்ட் மாநில சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரைக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதாவை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தராகண்ட் திகழ்கிறது.
பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவில், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் (‘லிவ்-இன்’) உறவைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இது தொடா்பாக சட்ட ஆணையம் மூலமாக நாட்டு மக்களிடமும் கடந்த ஆண்டு கருத்து கேட்கப்பட்டது.
இதனிடையே, உத்தரகண்டில் கடந்த 2022 பேரவைத் தோ்தலில், ‘மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. தோ்தலில் வென்று பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதும், பொது சிவில் சட்ட மசோதா வரைவை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு உருவாக்கிய 172 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்ட மசோதா 392 பிரிவுகளைக் கொண்டுள்ளது.
பொது சிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்ய உத்தராகண்ட் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூட்டப்பட்டது. 2-ஆவது நாளான நேற்றுபேரவை கூடியதும், பொது சிவில் சட்ட மசோதாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தாக்கல் செய்தார்.
தாக்கல் செய்யப்பட்ட நேற்றே மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவை அலுவலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 172 பக்கங்கள் கொண்ட மசோதாவில் உள்ள பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து விவாதிக்க போதிய நேரமில்லை என்று எதிா்க்கட்சிகள் முன்வைத்த எதிா்ப்பைத் தொடா்ந்து, அவைத் தலைவா் ரிது கன்தூரி விவாதத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கினார்.
இதைத் தொடர்ந்து, பொது சிவில் சட்ட மசோதா உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.