மத்திய அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலர் முதல் துணைச் செயலர்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நேரடித் தேர்வு முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நியமனங்கள் பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கான நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதற்கிடையே, நேரடி நியமனத்துக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த நிலையில், மத்திய அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு நேரடி தேர்வு முறை (லேட்ரல் என்ட்ரி) ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலை வாய்ப்புகளில் சமூக -நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது அவசியம் என பிரதமர் கூறியுள்ளதாக, மத்திய அமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடி பணி நியமனங்கள் மூலம் இட ஒதுக்கீட்டு முறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு முன்னதாக விளக்கம் கொடுத்திருந்தநிலையில், தற்போது நேரடி நியமன முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.