பூஜா கேத்கர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதை ரத்து செய்துள்ள மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), வரும் காலங்களில் அவர் தேர்வு எழுதுவதற்கும் தடை விதித்துள்ளது.
2022ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று மகாராஷ்ட்ராவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேத்கர் போலி சான்றிதழ் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சலுகைகளை பெற உடல் ஊனக் குறைபாடு உள்ளவர் என போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஓபிசி வகுப்பு சான்றிதழை முறைகேடாக பெற்றதாகவும் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.
யுபிஎஸ்சி விதிமுறைகளுக்கு மாறாக, அடையாளத்தை மறைத்து அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி பூஜா கேத்கர் தேர்வு எழுதியதாகவும் அடுத்தடுத்து புகார்கள் கிளம்பின.
இதனையடுத்து அவரது பயிற்சி ரத்து செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது யுபிஎஸ்சி.
இதற்கு கடந்த 25ம் தேதி விளக்கம் அளித்த பூஜா கேத்கர், ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் கோரினார். இதனை யுபிஎஸ்சி நிராகரித்து விட்டது.
இதனையடுத்து யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"2009 முதல் 2023 வரையிலான 15 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களின் தரவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த விரிவான ஆய்வுக்குப் பிறகு, பூஜா கேத்கர் தவிர, வேறு யாரும் சிவில் சர்வீஸ் தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதை விட அதிக முறை தேர்வுகளை எழுதியதாக கண்டறியப்படவில்லை. பூஜா கேத்கர் தனது பெயரை மட்டுமல்லாமல், தனது பெற்றோரின் பெயரையும் பலமுறை மாற்றி தேர்வு எழுதி இருக்கிறார். இதன் காரணமாக அவர் எத்தனை முறை சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார் என்ற எண்ணிக்கையைக் கண்டறிய முடியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜா கேத்கரின் பணி நீக்கத்தை வரவேற்பவர்கள் பலரும், ஏகப்பட்ட முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவர் எப்படி ஐஏஎஸ் ஆகமுடிந்தது என்றும், இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் தேர்வாகியுள்ளார்களோ என கேள்வி எழுப்பியுள்ளனர்.