முந்தைய அரசுகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்காததைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசிய நிலையில், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “ரிமோட் கண்ட்ரோலில் ஆட்சியை நடத்தியவர்கள் இங்கு உள்ளனர். அவர்களுக்கு வேலை செய்வதில் நம்பிக்கை இல்லை” என்று எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கிப் பேசினார்.
“சுதந்திர இந்தியாவின் பயண வரலாற்றில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர். 10 ஆண்டுகளை கடந்துள்ளோம். இன்னும் 20 ஆண்டுகள் செல்ல வேண்டியுள்ளது.
நாடு கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ள வளர்ச்சி வெறும் தொடக்கம்தான். இன்னும் பல படிகள் நாம் வளரப் போகிறோம். இங்கே சில அறிஞர்கள் நாடு தாமாக மூன்றாவது பொருளாதாரமாக வளர்ந்துவிடும் என்று கனவு கண்டுள்ளனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் அரசு போராடும். கடந்த 10 ஆண்டு அனுபவத்தில் கூறுகிறேன், இந்தியா மூன்றாவது பொருளாதாரமாக மாறும்போது, அதன் தாக்கம் அனைத்து துறைகளிலும் இருக்கும்.
கடந்த 10 ஆண்டுகளைவிட அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பெண்களின் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் நலன் கருதி பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் எதிர்க்கட்சியினரின் அணுகுமுறை மிகவும் கவலை அளிக்கிறது. மேற்கு வங்கத்தில் ஒரு பெண்ணை தாக்கும் காணொலியை கண்டேன், அதுகுறித்து ஒரு வார்த்தைகூட அவர்கள் பேசவில்லை.
இந்த தேர்தலில் கார்கே முழு ஆற்றலுடன் இருப்பதைப் பார்த்தேன். அவர் தனது கட்சிக்கு நிறைய சேவை செய்தார். ஏனென்றால், யாரோ ஒருவர் மீது சுமத்தப்பட வேண்டிய தோல்வி பழியை அவர் காப்பாற்றினார். இதுபோன்ற சூழல்களையெல்லாம் தலித் அல்லது பிற்படுத்தப்பட்டோர் தாங்க வேண்டும், அந்த குடும்பம் மட்டும் பாதுகாப்பாக இருக்கும்.
மக்களவைத் தலைவர் விவகாரத்திலும் தோற்கடிக்கப்படுவார் என்று தெரிந்தும் ஒரு தலித்தை முன்னிறுத்தினர். குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்தினார்கள்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு எதிரான மனப்பான்மை காங்கிரஸுக்கு உண்டு.
மணிப்பூர் மாநில சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கலவரம் தொடர்பாக 11 ஆயிரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன்,500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மற்ற நிறுவனங்கள் செயல்படுகின்றன. அமைதியை கொண்டு வர சம்பந்தப்பட்டவர்களுடன் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
மணிப்பூரில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என எச்சரிக்கிறேன்.” என்று பிரதமர் மோடி பேசினார்.