உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மோடியை விட்டா யாரு இருக்கா? - உத்தவ் தாக்கரே அதிரடி கேள்வி!

Published on

‘இந்தியா’ கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பலர் இருக்கின்றனர்; ஆனால், பாஜக அணிக்கு பிரதமர் மோடியை விட்டால் யார் இருக்கிறார் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் 28 கட்சிகள் சார்பில் 63 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ”இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சித்தாந்தங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்தைக் காப்பதே எங்கள் ஒற்றை நோக்கம். இந்தியா கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணைகின்றன. இந்தக் கூட்டணியின் வளர்ச்சியைப் பார்த்து பயத்தில் பாஜக அரசு இலவசமாக கூட கியாஸ் சிலிண்டர்களை கொடுக்கும்.”என்றார்.

மேலும்,“பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இந்தியா கூட்டணியில் பலர் இருக்கின்றனர். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பிரதமர் மோடியை விட்டால் யார் இருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார். நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் பஜ்ரங் பலி கோஷத்தை முன்வைத்தனர்; அவர்களைக் கடவுள் கூட ஆசிர்வதிக்கவில்லை என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com