கர்நாடக மாநிலம் பெங்களூர் ஓட்டலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சந்தேகத்துக்குரிய நபர், ஏழு நிமிடங்களே அங்கு இருந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூர் ஒயிட்ஃபீல்டு குண்டல அள்ளி சாலையில் உள்ள இராமேசுவரம் கஃபே பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் அந்த நபர் பேருந்து மூலம் வந்திறங்கியுள்ளான்.
11.38 மணிக்கு ரவா இட்லி வாங்கி காசாளரிடம் பணம் செலுத்தியுள்ளான்.
11.44 மணிக்கு உணவை முடித்துவிட்டு கைகழுவும் இடத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் பையை அந்த இடத்தில் போட்டுவிட்டு, அடுத்த நிமிடத்தில் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் போனபிறகு, 12.55 மணிவாக்கில் குண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். நல்வாய்ப்பாக யாருக்கும் கவலைப்படும்படியான நிலைமை இல்லை.
இன்று காலையில், துணை முதலமைச்சர் சிவக்குமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவுடன் இணைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் பார்த்தார். அவர்களுக்கான சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.
குற்றவாளி சந்தேக நபர் பேருந்திலிருந்து இறங்கும்போதே முகக்கவசம் அணிந்தபடி இருப்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. பதிவாகியுள்ள முக அடையாளத்தை வைத்து ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவனை அடையாளம்காண்பதில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.