சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

மத்திய இணையமைச்சர் பதவி வேண்டாம்! – சுரேஷ் கோபி

Published on

மத்திய இணையமைச்சராக நேற்று இரவு பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, சினிமாவில் நடிக்க இருப்பதால் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று மலையாள ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, 4,12,338 வாக்குகள் பெற்று, 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கேரளத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒரே ஒரு பா.ஜ.க., எம்.பி. சுரேஷ் கோபி ஆவார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றிரவு சுரேஷ் கோபி மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அவர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே மலையாள ஊடகத்துக்குப் பேட்டி அளித்த அவர், படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால், தற்போது அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியிருந்தேன்; ஆனால், கட்சித் தலைமை கூறியதால் பதவியேற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியிலிருந்து கட்சித் தலைமை தன்னை விடுவிக்கும் என்று நம்புவதாகவும், எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சுரேஷ் கோபியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் கோபி நான்கு படங்களில் நடிக்கத் தயாராகி வருவதாகவும், பத்மநாபசுவாமி கோயிலின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டதே, இந்த விலகலுக்குக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com