பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் சில மாநிலங்களில் அதிலும் மிகவுப் பின்தங்கிய பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்கான 18 சதவீத ஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீதம் ஒதுக்கப்படுகிறது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. முக்கியமாக இ.வி.சின்னையா எதிர் ஆந்திரப்பிரதேச அரசு எனும் வழக்கில் கடந்த 2005ஆம் ஆண்டில், இப்படி உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது அரசமைப்புச் சட்டத்தின் 341ஆவது பிரிவின்படி குடியரசுத்தலைவருக்கு மட்டுமே பட்டியல் சாதி ஒதுக்கீட்டில் இடம்பெறக்கூடிய சாதிகள் பற்றிய அதிகாரம் உள்ளது; இந்த உள் ஒதுக்கீடு அதைப் பறிப்பதாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் ஏழு நீதிபதிகள் அமர்வில் 6 பேர் உள் ஒதுக்கீடு சரி என்றும் பெலா திரிவேதி என்பவர் மட்டும் மாறுபட்டும் தீர்ப்பு வழங்கினர்.
பெரும்பான்மை அடிப்படையில் உள் ஒதுக்கீட்டுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
ஏழு நீதிபதிகளில் நான்கு பேர், பட்டியல் சாதி ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் பிரிவினருக்கு ஒதுக்கீடு தரக்கூடாது எனும் முறையைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்ததும் முக்கியமானது.