உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக மூன்று பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான நீதிபதித் தேர்வுக்குழு- கொலிஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
அதன்படி, புதுடெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ், கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய மூவரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்வில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற பார்கவுன்சில் நிர்வாகிகள், பதவி ஏற்றுக் கொண்ட நீதிபதிகளின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இவர்களின் பதவியேற்புடன் உச்சநீதிமன்றம் அதன் மொத்த 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்பட உள்ளது, குறிப்பிடத்தக்கது.