வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க.வுக்கு அழுத்தினால் கேரளத்தில் இரண்டு வாக்குகள் விழுந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் காசர்கோட்டில் இன்று நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது, பா.ஜ.க.வுக்கான பொத்தானை அழுத்தியபோது 2 வாக்குகள் பதிவாகின. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கான 190 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலையில் சோதிக்கப்பட்டன. முதல் கட்டமாக 20 எந்திரங்களைச் சோதனைசெய்தபோது, நான்கு எந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு மட்டும் இரண்டு வாக்காளருக்கான ஒப்புகைச் சீட்டுகள் வெளியாகின.
காங்கிரஸ் கூட்டணியின் ராஜ்மோகன் உன்னித்தானின் முகவர் முகமது நாசர் சேர்களம், உதவி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரும் சி.பி.எம். கட்சித் தலைவருமான எம்.வி.பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான இன்பசேகரிடம் புகார் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா அமர்வு, இதைக் கவனிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.