மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 72.
ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் சொந்த ஊர்ப் பெயர்தான், யெச்சூரி. முதலில் ஆந்திரத்திலும் பின்னர் சென்னையிலும் படித்தவர், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.
1974ஆம் ஆண்டில் இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தவர், அடுத்த ஆண்டில் அவசரநிலைக் காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினராகவும் 2005 முதல் 2017வரை இரண்டு முறை பதவிவகித்தார்.
பிரகாஷ் காரத்துக்கு அடுத்து, 2015இல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அமைச்சரவைக்கும் பின்னர் ஐக்கிய முன்னணி அமைச்சரவைக்கும் வெளியிலிருந்து ஆதரவளித்ததில் யெச்சூரி முக்கிய பங்கு வகித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின்போது, அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பாக காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது கூட்டணியைவிட்டு விலகும்முன் அதைத் தடுப்பதற்கான முனைப்பில் யெச்சூரியின் பங்கு குறிப்பிடத்தக்கது.