கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 10 தேதி தேர்தல் நடந்து முடிந்து 13ஆம் தேதி முடிவுகள் வெளியானது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்கட்சியாக உருவானது. ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாகவும் கடந்த ஐந்து நாட்களாக தலைவர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் கூட்டம் நடந்தது. இதில், கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்ற அரசியலில் பரபரப்பு நீடித்து வந்த நிலையில், கர்நாடகவின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு பெங்களூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது. சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக சித்தராமையா கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார். அதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
மேலும், நாளை மறுநாள் (மே-20) பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சித்தராமையா இரண்டாவது முறையாக கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.