திருப்பதி திருமலை தேவஸ்தானம் வழங்கும் லட்டில் கடந்த ஆட்சியில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு கூறியது, அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வந்து 100 நாள்கள் ஆனதையொட்டி, நேற்று விஜயவாடாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு, திருப்பதி லட்டு பிரசாதத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் நெய்யுடன் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.
லட்டு தயாரிப்பு தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுந்துவரும் நிலையில் அவரின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை உண்டாக்கியது.
தேவஸ்தான நிர்வாகம் இரு மாதங்களுக்கு முன்னர் ஒரு நெய் வழங்கும் ஒப்பந்தகாரர் தரமில்லாத நெய்யை வழங்கியதால் அவரை தடைப் பட்டியலில் சேர்த்தது என்று செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனம் மொத்தம் 8.5 இலட்சம் கி.கி. நெய்யை தேவஸ்தானத்துக்கு வழங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதில் 68 ஆயிரம் கி.கி. நெய்யை இதுவரை வழங்கியுள்ளது. அதில் 20 ஆயிரம் கி.கி. நெய் தரமில்லாதது என சோதனையில் கண்டறியப்பட்டது. ஆனால் அந்த நிறுவனத்தின் நெய்யில்தான் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதா என்பது உறுதிசெய்யப்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க, முந்தைய ஆட்சியில் தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவராக இருந்த ஒய்.வி. சுப்பாரெட்டி, கருணாகர் ரெட்டி ஆகியோர், லட்டு விசயத்தில் சந்திரபாபு அசிங்கமான அரசியல் செய்வதாக கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான திருமலையின் புனிதத்தை சந்திரபாபு கடுமையாக சேதப்படுத்திவிட்டார்; அவரின் கருத்துகள் மிக மலிவானவை; யாருமே இப்படியான வார்த்தைகளைப் பேசமாட்டார்கள் என்கிறார் சுப்பாரெட்டி.
ஏழுமலையான் இப்படியான கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை மன்னிக்கவே மாட்டார் என்று கருணாகர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் மீதே சந்திரபாபு தாக்குதல் நடத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. மாநிலச் செய்தித்தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டியோ இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஜெகன் மோகனின் இந்துவிரோத ஆட்சியில் மத உணர்வுகளுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
முந்தைய ஆட்சியில் கிரிமினல் பின்னணி கொண்டவர்களை தேவஸ்தானத்தில் அமர்த்தியதுடன், 5ஆயிரம் கோடி ரூபாய் நிதியைத் திருப்பிவிட்டுள்ளனர் என்றும் அவர் சாடினார்.
காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவர் தொட்டாரெட்டி ராம்பூபால் ரெட்டி இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்றும் சந்திரபாபுவின் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்றும் தெரிவித்துள்ளார்.