நாடாளுமன்றத் தேர்தலை பார்வையிட ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இன்னும் 5 கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை பார்வையிட உலக மேலாண்மை அமைப்பு சார்பில் 23 நாடுகளைச் சேர்ந்த 75 சர்வதேச பார்வையாளர்கள் இந்தியா வந்துள்ளனர்.
பங்கேற்கும் 23 நாடுகளில் பூடான், மங்கோலியா, ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், பிஜி, கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, மால்டோவா, துணிசியா, சீஷெல்ஸ், கம்போடியா, நோபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, ஜிம்பாப்பே, வங்கதேசம், கஜகஸ்தான், ஜார்ஜியா, சிலி, உஸ்பெகிஸ்தான், மாலத்தீவு, பப்புவா நியூ கினியா மற்றும் நமீபியா ஆகியவை அடங்கும். இந்த பிரதிநிதிகள் தவிர, தேர்தல் அமைப்புகளுக்கான சர்வதேச அறக்கட்டளை நிர்வாகிகளும், பூடான் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த ஊடக குழுவினரும் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். அதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் அனைவரும் கோவா, குஜராத், மராட்டியம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களின் இந்த சுற்றுப்பயணம் வரும் 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மேற்கண்ட இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.