மகளின் கைக்கு இறுதிச் சடங்கு: மனதைப் பிழியவைக்கும் தந்தையின் துயர்!

மகள் ஜிசாவின் கைக்கு இறுதிச்சடங்கு செய்யும் ராமசாமி
மகள் ஜிசாவின் கைக்கு இறுதிச்சடங்கு செய்யும் ராமசாமி
Published on

வயநாடு நிலச்சரிவு ஒவ்வொரு நாளும் நெஞ்சை உலுக்கும் கண்ணீர் கதைகளைக் கொண்டு வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இது.

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது மனைவி, மகள்கள், மருமகன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த வாரம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவரது குடும்பத்தினர் இழுத்துச் செல்லப்பட்டனர். மீட்புப் படையினரால் அவர்களது உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்போது, மண்ணில் புதைந்தவர்களின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக கிடைக்கும் நிலையில், ராமசாமியின் இரண்டாவது மகளான ஜிசாவின் இடது கை மட்டும் மீட்பு குழுவினருக்கு கிடைத்துள்ளது. ஆனால், அதை ராமசாமியிடம் தர மறுத்துள்ளனர். அப்போது, ஜிசாவின் விரலில் அவரது கணவர் அணிவித்திருந்த மோதிரத்தை அடையாளம் காட்டி, ‘இது என்னுடைய மகளின் கைதான். அந்த மோதிரத்தின் என்னுடைய மருமகன் முருகன் பெயர் உள்ளது பாருங்கள்’ என்று கூறியுள்ளார் ராமசாமி.

பின்னர், டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகு ஜிசாவின் கையை அவரிடம் தந்துள்ளனர்.

இந்த நிலையில், தன் மகளின் ஒற்றை கைக்கு இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மகள் ஜிசாவின் ஒரு கை வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு தகன மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்க்கும் ராமசாமி தன் முகத்தை மூடியபடி கதறி அழுகிறார். பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்யக்கூடியதாக அந்தப் புகைப்படம் உள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி பெய்த கனமழையால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்தன. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

இதுவரையில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com