ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவரது மகன் நாரா லோகேஷுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு ஆட்சியிலிருந்த காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.371 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சந்திரபாபுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபுவுக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, விஜயவாடா அருகே உள்ள மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாததைக் குறிப்பிட்டு சந்திரபாபு தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. வீட்டுக்காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி கோரப்பட்டது. அதனை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷை ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு தவறு செய்யமாட்டார் என்றும் தன்னலமற்ற பொதுசேவை அவரைக் காப்பாற்றும் என்றும் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.