இடஒதுக்கீடு தொடர்பாக பேசிய ராகுல்காந்தி நாக்கில் சூடு வைக்க வேண்டும் என பாஜக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சென்றிருந்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அங்கு அளித்த பேட்டி ஒன்றில், “பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும்” என தெரிவித்திருந்தார். இவ்வாறு கருத்துக்கூறிய ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இட ஒதுக்கீடு தொடர்பாக கருத்துக்கூறிய ராகுல் காந்தியின் நாக்கை வெட்டினால் ரூ.11 லட்சம் பரிசு தருவேன் என மகாராஷ்டிராவின் ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ.கெய்க்வாட் பேசியிருந்தார். இது தொடர்பாக போலீசில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் கொடுத்தனர். இதனால் கெய்க்வாட் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா பாஜக எம்பி அனில் போந்தே, ராகுல் காந்தியின் நாக்கை வெட்ட வேண்டும் என பேசியது தவறு. அப்படி எல்லாம் செய்யக் கூடாது. பொதுவாக யாராவது தவறாக பேசினால் நாக்கில் சூடு போடுவது வழக்கம். அதுபோல ராகுல் காந்தியின் நாக்கிலும் சூடு போட வேண்டும். மக்கள் உணர்வுகளை காயப்படுத்துகிற யாராக இருந்தாலும் அவர்களது நாக்கில் சூடு போடத்தான் வேண்டும் என பேசி அதிர்ச்சியளித்திருந்தார். பாஜக எம்பி அனில் போந்தே பேச்சுக்கு சிவசேனா தலைவரான முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது அனில் போந்தே எம்பி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.