ஏழைகள், பிராணிகளை விருந்தினர்களிடம் ஏன் மறைக்க வேண்டும்?- ராகுல் கேள்வி

மாணவர்களுடன் உரையாடும் ராகுல் காந்தி
மாணவர்களுடன் உரையாடும் ராகுல் காந்தி
Published on

ஜி-20 மாநாட்டுக்கு வந்திருக்கும் பன்னாட்டு தலைவர்களிடம் நாட்டின் யதார்த்தத்தை மத்திய அரசுஏன் மறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜி-20 மாநாட்டு விருந்துக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காதது பற்றி நேற்று ராகுல் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அவர் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், தலைநகர் டெல்லியில் உள்ள நம் மக்களையும் விலங்குகளையும் மத்திய அரசு மறைக்கிறது என்றும் நம்முடைய (ஜி20) விருந்தினரிடம் நம் நாட்டின் யதார்த்தத்தை மறைக்கவேண்டிய தேவையே இல்லை என்று   ராகுல் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய டெல்லி பகுதியில் அமைந்துள்ள காந்தி சமாதிக்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் வரவுள்ளதால், அங்கிருக்கும் அதிகப்படியான குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த டெல்லி காவல்துறை வெள்ளியன்று அறிவிப்பு வெளியிட்டது. தன்னார்வ அமைப்புகளின் உதவியையும் காவல்துறை கோரியிருந்தது. தெரு நாய்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், டெல்லி மாநகராட்சிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அதன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுசாரா அமைப்புகளினருடன் கலந்துரையாடி வரும் ராகுல் காந்தி, அங்கு ஒரு வாரம் தங்கவுள்ளார். கார்கேவை ஜி20 நாடுகள் விருந்துக்கு அழைக்காதது பற்றி ராகுல் நேற்று பேசியதை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமும் இன்று அதிருப்தி தெரிவித்திருந்தார். ஜனநாயகமோ எதிர்க்கட்சியோ இல்லாத ஒரு நாட்டில்தான் இப்படி நடக்கமுடியும் என சிதம்பரம் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com