பேராசிரியரும் மனித உரிமை ஆர்வலருமான ஜி.என். சாய்பாபா காலமானார்!

Prof. Saibaba
பேராசியர் ஜி.என்.சாய்பாபா
Published on

டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் மனித உரிமை ஆர்வலருமான ஜி.என்.சாய்பாபா உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 57.

மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடா்புடையதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டில் சாய்பாபா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த நாகபுரி அமர்வு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இத்தீர்ப்புக்கு எதிரான சாய்பாபாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அவா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த மாா்ச் மாதம் விடுவித்தது.

சிறையிலிருந்து வெளியே வந்த அவர், “சக்கர நாற்காலி இல்லாமல் எட்டரை ஆண்டுகள் ஒரே அறையிலிருந்தேன். கழிவறையைப் பயன்படுத்துவது, குளிப்பது அல்லது ஒரு குவளை தண்ணீர் எடுப்பது கூட தினசரி போராட்டமாக இருந்தது. சிறையில் என்னைப் போன்றவர்களுக்கு (மாற்றுத்திறனாளிகளுக்கு) ஒரு சாய்வுதளம் கூட இல்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சாய்பாபா சிறையிலிருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை அவரின் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மருந்துகளை பொறுவதற்கு கூட அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலையில், பித்தப் பை தொற்று மற்றும் பிற பாதிப்புகள் காரணமாக ஹைதராபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பேராசிரியர் சாய்பாபா நேற்று இரவு 9 மணியளவில் மரணமடைந்தார்.

அவரின் மறைவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் இரங்கள் தெரிவித்து வரும் நிலையில், பாதிரியார் ஸ்டான் சுவாமியைப் போலவே பேராசிரியர் சாய்பாபாவும் மத்திய அரசின் ஒடுக்குமுறையால் உயிரிழந்துள்ளனர் என்று விமர்சித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com