இந்தியா கூட்டணியின் பி.ஆர்.ஓ. மோடி- ஸ்டாலின் கிண்டல்!

இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் உரையாற்றும் மு.க.ஸ்டாலின்
இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் உரையாற்றும் மு.க.ஸ்டாலின்
Published on

பாஜக அல்லாத பல கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பிரதமர் மோடி விளம்பர அதிகாரியாக செயல்படுகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் பேசியது:

”பாட்னாவில் 19 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து முதல் கூட்டத்தை நடத்தினோம். முதல் கூட்டத்தைப் பொறுத்தவரை ஒற்றுமையாக இருந்து, பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதைத் தொடர்ந்து, இரண்டாவது கூட்டமாக பெங்களூரில் நடத்தினோம். அப்போது, அந்தக் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டினோம். மூன்றாவதாக மும்பையில் 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து, வலிமை மிக்க கூட்டணியாக இதை மாற்றிக்காட்டியிருக்கிறோம்.

பா.ஜ.க. எப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். குறிப்பாக, பிரதமர் மோடி எங்கு சென்றாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது தனிப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கடந்த 9 வருடமாக செய்திருக்கக் கூடிய சாதனைகளைப் பற்றி சொல்லாமல். சிறந்த ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லமுடியாமல் இருக்கிறார்.

நாங்கள் அமைத்திருக்க கூடிய இந்தியா கூட்டணியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். விளம்பர அதிகாரியாக பிரதமரே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எங்கள் கூட்டணியின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் எந்த சாதனையும் கிடையாது. மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘அன் பாப்புலர்’ ஆகி வருகிறது. இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் ‘பாப்புலர்’ ஆகி வருகிறது. இது ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணி மட்டும் அல்ல; இந்திய நாட்டையும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்கான கூட்டணி.

இந்தக் கூட்டம் திருப்புமுனைக் கூட்டமாக அமைந்திருக்கிறது. பாஜக ஆட்சியின் கவுண்ட் டௌன் தொடங்கிவிட்டது. இதுவரை இந்தியா கண்டிராத சர்வாதிகார ஆட்சியை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அண்மையில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் சிஏஜி கொடுத்திருக்கும் விவரங்கள் உங்களுக்குத் தெரியும். அதுபற்றி பிரதமர் மோடி வாய்திறந்து பதில் சொல்ல முன்வரவில்லை.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பில்லை. தேர்தல் ஆணையத்திற்கும் சுதந்திரம் இல்லை. ஈடி, சிபிஐ, ஐடி என அரசியல் எதிரிகளை அச்சுறுத்துகிற ஏவல் அமைப்புகளாக- பாஜக இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது.

நாங்கள் தனித்தனி கட்சியாக இருந்தாலும், நாட்டைக் காப்பாற்ற ஒன்றாக சேர்ந்துள்ளோம். அரசியல் லாபங்களுக்காக ஒன்று சேர்ந்திருக்கோம் என்று நினைக்காதீர்கள். இந்தியாவின் மாண்பை, மதச்சார்பின்மையை, சமூகநீதியைக் காப்பாற்ற ஒன்றிணைந்திருக்கிறோம். பெரிய போர்க்களத்தில் ஈடுபடப்போகிறது. நீங்கள் அதற்கு துணை நிற்க வேண்டும்.” என்று ஸ்டாலின் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com