பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருப்பதை காங்கிரஸ் கட்சியால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அங்கு பா.ஜ.க. சார்பில் இரண்டாவது நாளாகப் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி, இன்று நாண்டெட்டில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஒன்றுபட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளத்தைக் குலைத்து அதை சிறுசிறு சாதிக் குழுக்களாகப் பிரித்து, அதை பலவீனப்படுத்தப் பார்க்கிறது காங்கிரஸ் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் இந்தப் பிளவுபடுத்தும் உத்திகளில் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்; நாட்டைப் பிரித்து, நாசமாக்கும் அதன் மறைமுகத் திட்டம் குறித்தும் கவனத்துடன் இருக்கவேண்டும் என்ற மோடி, ’நாம் ஒன்றுபட்டால் பாதுகாப்பாக இருப்போம்’ என முழக்கத்தையும் எழுப்பினார்.
மகாராஷ்டிரப் பரப்புரையில் இரண்டாவது முறையாக அவர் இந்த முழக்கத்தை முன்வைத்து வாக்கு சேகரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, துலே எனும் இடத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் அவர், இதே முழக்கத்தை தன் பேச்சில் வைத்திருந்தார்.