ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் பேச்சின் சில பகுதிகள் நீக்கம்! - என்ன காரணம்?

Published on

மக்களவையில் நேற்று ராகுல் காந்தி பேசியதன் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவைத் தலைவர் ஓம். பிர்லா தெரிவித்துள்ளார்.

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.

அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம், மக்களவையில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால், ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரத்தில் உடனடியாக விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் விவாதம் தொடங்கப்படவில்லை.

இந்தச் சூழலில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் மக்களவையில் நேற்று

பாஜக எம்.பி. அனுராக் தாக்கூா் தொடங்கி வைத்த இந்த விவாதத்தில் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் ஆளும் பாஜகவை கடுமையாக விமா்சித்தாா்.

அவையில் சிவபெருமான், இயேசு கிறிஸ்து, குருநானக் ஆகியோரின் படங்களைக் காண்பித்து பேசிய ராகுல், ‘இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், சமணம் என அனைத்து மதங்களும் அகிம்சை மற்றும் அஞ்சாமையின் முக்கியத்துவத்தைப் போதிக்கின்றன. சிவபெருமானின் அபய முத்திரை, அகிம்சையை உணா்த்துகிறது. ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவா்கள், எந்நேரமும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்கள் குறித்தே பேசுகின்றனா். அவா்கள் இந்துக்கள் அல்லா்’ என்றாா்.

அப்போது இருக்கையில் இருந்து எழுந்த பிரதமா் மோடி, ‘ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளா்கள் என்று குறிப்பிடுவது மிகத் தீவிரமான விஷயம்’ என்று கண்டனத்தைப் பதிவு செய்தாா்.

பின்னா், பிரதமருக்கு பதிலளித்த ராகுல், ‘நான் பாஜக குறித்துதான் பேசினேன். பாஜகவோ, ஆா்எஸ்எஸ் அமைப்போ அல்லது மோடியோ ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் அல்லா்.

வெறுப்புணா்வையும் அச்சத்தையும் பரப்பும் செயலில் ஒரு இந்து ஈடுபடமாட்டாா். உண்மையின் பக்கம் நிற்க வேண்டுமென இந்து மதத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவினா் அனைவரும் வன்முறை, வெறுப்புணா்வு, பொய்மையைப் பரப்புகின்றனா்.

இப்போது எதிா்க்கட்சி வரிசையில் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில், ஆட்சி அதிகாரத்தைவிட உண்மை மேலானது’ என்றாா் ராகுல்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இடைமறித்துப் பேசுகையில், ‘தங்களை இந்துக்களாக அடையாளப்படுத்தி பெருமைகொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணா்வுகளை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டாா். தனது பேச்சுக்காக அவையில் அவா் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நீட் தேர்வு, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்துப் பேசினார்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி குறித்து பேசிய சில பகுதிகளும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்களும் மற்றும் அக்னிவீர் குறித்து பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இன்று இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார்.

இதற்கிடையே அவர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அவருக்கு மட்டும் தானா?

நேற்றைய தன் உரையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவையும் விட்டு வைக்கவில்லை. சபையில் அனைவரையும் சமமாக நடத்தவேண்டும் என்று கூறிய ராகுல், பிரதமர் மோடியும் தானும் சபாநாயகராகத் தேர்வான ஓம் பிர்லாவை அவரது நாற்காலியில் அமர வைக்க அழைத்துச் சென்றபோது மோடியுடன் கை குலுக்கியபோது அவருக்கு தலை வணங்கி வணக்கம் தெரிவித்த ஓம் பிர்லா, தான் கைகுலுக்கியபோது நேராக நின்றதாகச் சுட்டிக்காட்டினார்.

அதிர்ந்த ஒம் பிர்லா,’ வயது முதிர்ந்தவர்களுக்கு(மோடி) வணங்குவது தன் பண்பாடு” என்றார்.

ஆனால் சபாநாயகர் பதவி என்பது இங்கே எல்லோருக்கும் மேலானது அல்லவா என்று ராகுல் திருப்பிக் கேட்டார்.

ராகுலின் பேச்சில் நேற்று அனல் பறந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com