வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலியாற்றைக் கடந்து 35 பேருக்குச் சிகிச்சை அளிக்கவேண்டிய தேவை இருந்தது. சூரல்மலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்க, ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்குச் செல்ல ஜிப்லைன் எனப்படும் கயிறு இணைப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலமாக அக்கரைக்குச் செல்ல ஆண் செவிலியர் யாரும் இருக்கிறார்களா என்று அதிகாரிகள் கேட்டனர். ஆனால் நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து சென்ற மருத்துவக் குழுவில் சபீனா எனும் பெண் செவிலியர் மட்டுமே இருந்தார்.
அதிகாரிகள் தயங்கியபோதும், அக்கரைக்குப் போக தனக்கு அச்சமில்லை எனக்கூறி அவர் ஜிப்லைனில் ஆற்றைக் கடந்து, மருத்துவப் பெட்டியுடன் அக்கரைக்குச் சென்றார். ஜீப் மூலம் கூட்டிவரப்பட்டிருந்த வெள்ள பாதிப்புப் பகுதியின் 35 பேருக்கு அவர் முதலுதவி சிகிச்சையளித்தார்.
வெள்ளம் செல்லும் ஆற்றைக் கடக்க தனக்கு அச்சமில்லை என்றும் போகும்போது ஓர் இடத்தில் மருந்துப்பெட்டி கீழே விழுந்துவிடுமோ என மட்டும் பயந்ததாகவும் அவர் ஊடகத்தினரிடம் கூறினார்.
உயிரைப் பணயம் வைத்து துணிச்சலுடன் செயல்பட்ட செவிலியர் சபீனாவுக்கு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.