நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யாதது ஏன்? என்பது பற்றி விரிவான காரணங்களுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதில், “நீட் வினாத்தாள் கசிவு பாட்னா மற்றும் ஹசாரிபாக்-ல் உள்ள மையங்களில் மட்டுமே நடந்துள்ளதால் மொத்த தேர்வையும் ரத்து செய்வது சரியல்ல. தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் தேர்வுகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய கல்வி அமைச்சகம் அமைத்த உயர்நிலை நிபுணர் குழுவுக்கு கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.
நிபுணர் குழு நீட் தேர்வின் புனித தன்மையைப் பாதுகாக்கவும், பாதுகாப்பு விதிமுறைகளை மேம்படுத்தவும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
உயர்நிலை நிபுணர் குழு போட்டித் தேர்வில் நடைபெறும் ஆள் மாறாட்டத்தை தடுக்கும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.
அனைத்து நீட் தேர்வு மையங்களிலும் சிசிடிவி பொருத்த வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவை தடுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்துகிறோம்.
நீட் தேர்வு விவகாரத்தில் தரவுகள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
வினாத்தாள்களை தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் சோதனைகளை உறுதிசெய்ய வேண்டும். மின்னணு கைரேகைகள், சைபர் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டும்.
நீட் தேர்வு போன்றவற்றை எழுதும் தேர்வர்களுக்கும், நடத்துவோருக்கும் மனநலம் மேம்படும் வகையில் கவுன்சிலிங் முறை ஏற்படுத்த வேண்டும்.
கல்வி அமைச்சகம் அமைத்துள்ள உயர்நிலை நிபுணர் குழு அதன் அறிக்கையை செப்டம்பர் 30-க்குள் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். குழுவின் பரிந்துரைகளை ஏற்று அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.