மதுரை எய்ம்ஸ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டது என நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் மீது எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி மக்களவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக காங்கிரஸ், திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசினர்.
இடையிடையே அமைச்சர்களும் குறுக்கிட்டு விளக்கம் அளித்துவருகின்றனர். நேற்று அமைச்சர் ஸ்மிருதி ரானியின் பேச்சால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று மதியம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துப் பேசினார். அப்போது, அவர் குறிப்பிட்ட சில அம்சங்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே எதிர்ப்பைக் கிளப்பிவிட்டது. குறிப்பாக, திமுக உறுப்பினர் நேற்று அவையில் பேசியதற்கு அமைச்சர் நிர்மலா பதிலளித்துப் பேசினார்.
“நாடு விடுதலை அடைந்தபோது நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. அதை அவர் கைத்தடியாகப் பயன்படுத்தினார். அது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? ஆனால் அந்த செங்கோலை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வைத்திருக்கிறார்; அதை ஏற்றுக்கொள்ள முடியாதா? ஜல்லிக்கட்டு பிரச்னையில் நீங்கள் யாரும் கண்ணீர் வடிக்கவேண்டாம். அது காட்டுமிராண்டித்தனம் எனக் கூறி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தடை செய்தது. ஆனால் மோடி பிரதமரானதும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்தார். இந்தியைத் திணிக்கவேண்டாம் என்றும் சிலப்பதிகாரத்தைப் படிக்கும்படியும் கனிமொழி பேசினார். இந்தியையும் சமஸ்கிருதத்தையும் படிக்கவிடாமல் தடுக்கிறது, திமுக. அதற்கான அதிகாரம் உங்களுக்கு இல்லை.” என்றும்,
”சிலப்பதிகாரம் பற்றி ம.பொ.சி. தமிழ் முரசு இதழில், நாம் திராவிடர் அல்ல; தமிழர். நம் தாயகத்தின் பெயர் திராவிடம் அன்று, தமிழகம் என சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதைத்தான் பிரதமர் மோடி செய்துகாட்டி வருகிறார். ஆனால் அரசியல் செய்வதற்காக அவர்கள் உண்மையைப் பேசமறுக்கின்றனர். கனிமொழி அவர்கள் திரௌபதி குறித்துப் பேசினார்; அவருக்கு ஒரு நிகழ்வை நினைவூட்டுகிறேன். 1989ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்து திமுகவினர் அவரை அவமானப்படுத்தினார்கள். இவர் இப்போது திரௌபதியைப் பற்றிப் பேசுகிறார். “ என்றும் நிர்மலா சீதாராமன் பேசினார்.
அவரின் பேச்சுக்கு திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடுமையாக கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். எதிர்ப்பை வெளிப்படுத்த அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போதும் விடாத அமைச்சர் நிர்மலா, ”தமிழ்நாட்டைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது; கேட்காமல் போகிறீர்கள்... வெளியே போய் டிவியில் பாருங்கள்” என்று காட்டமாகக் கூறினார்.