மக்களவை: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

மக்களவை: வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!
Published on

கடந்த காங்கிரஸ் அரசின் பொருளாதார நிலை, கொள்கைகள் குறித்து மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு பொருளாதார ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், 2014ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார முடிவுகள், நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன. 2014இல் இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் அதிக பலவீனமாக இருந்தன. தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருந்தன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று காலையில் பா.ஜ.க. அரசின் பத்தாண்டுகால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com