அரியானாவில் அதிரடி- புதிய முதல்வராகப் பதவியேற்ற நயால் சிங் சைனி!
அரியானா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நயால் சிங் சைனி பதவியேற்றுக் கொண்டார்.
அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. - ஜனநாயக ஜனதா கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பா.ஜ.க.வின் மனோகர் லால் கட்டார் இருந்தார். துணை முதலமைச்சராக ஜனநாயக ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா இருந்தார். மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் காரணமாக இரு கட்சிகள் இடையிலான கூட்டணி முறிந்தது.
அதையடுத்து மனோகர் லால் கட்டார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதுடன், அமைச்சரவையைக் கலைக்கவும் பரிந்துரை செய்தார். இதை ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஏற்றுக்கொண்டார்.
சுயேச்சைகள் ஆதரவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் பா.ஜ.க. ஈடுபட்டது. புதிய முதலமைச்சராக அம்மாநில பா.ஜ.க. தலைவர் நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று மாலையே சண்டிகரில் நயாப் சிங் சைனி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் மனோகர் லால் கட்டார் உட்பட பா.ஜ.க. வின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.