‘டிகிரி வாங்கி பயனில்லை... பஞ்சர் கடை வைக்கலாம்!’ - சர்ச்சை எம்.எல்.ஏ.!

‘டிகிரி வாங்கி பயனில்லை... பஞ்சர் கடை வைக்கலாம்!’ - சர்ச்சை எம்.எல்.ஏ.!

Published on

பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், ‘படித்து பட்டம் பெறுவதால் பயனில்லை. மோட்டாா் சைக்கிளுக்கு பஞ்சா் பார்க்கும் கடை வைக்கலாம்’ என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ’பிஎம் காலேஜ் ஆஃப் எக்சலன்ஸ்’ என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் 55 மாவட்டங்களில் இந்த புதிய கல்லூரிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, குணா மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பன்னாலால் சாக்யா பேசிய காணொலி பதிவு சமூக ஊடகங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் பன்னாலால் பேசியதாவது:

இங்கு பிரதமா் சிறப்புக் கல்லூரியைத் தொடங்கியுள்ளோம். மாணவா்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றை மட்டும் தெளிவாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கல்லூரியில் படித்து கிடைக்கும் பட்டத்தால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. இதற்கு பதிலாக மோட்டாா் சைக்கிளுக்கு பஞ்சா் பாா்க்கும் கடை வைத்தால் உங்கள் வாழ்க்கையை நடத்த முடியும் என்றாா்.

புதிய கல்லூரி திறப்பு விழாவில் கல்வி கற்பதைவிட ‘பஞ்சா்’ ஒட்டுவது சிறந்தது என்று எம்எல்ஏ பேசியது அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பன்னாலால் சாக்யா
பன்னாலால் சாக்யா

யார் இந்த சர்ச்சை மன்னன்?

நீண்டகாலம் ஆர்.எஸ்.எஸ். ஊழியராக இருந்த பன்னாலால் 2013ஆம் ஆண்டு முதல் முறையாக குணா தொகுதியின் எம்.எல்.ஏ ஆனார். பின்னர், 2018 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

சாக்யா இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறை அல்ல. விராட் கோலியின் திருமணம் குறித்து, ‘ராமர், கிருஷ்ணர், விக்ரமாதித்யா உள்ளிட்டோர் நம் நாட்டில்தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அதேபோல், இங்கு கூடியிருக்கும் மக்கள் அனைவரும் நமது நாட்டிலேயே திருமணம் செய்துகொண்டனர் அல்லது திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால், நம்மில் யாரும் விராட் கோலி போல வெளிநாட்டில் சென்று திருமணம் செய்துகொள்ள மாட்டோம். பணத்தையும், புகழையும் இங்கு சம்பாதித்த விராட் கோலி, அவற்றையெல்லாம் வெளிநாட்டுக்கு அவர் எடுத்துச் சென்றுவிட்டார்.’ என்று பேசியிருந்தார்.

இதற்கு முன்னதாக, ‘அர்ப்பணிப்பும் தொண்டு உணர்வும் தைரியமும் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதை விட பெண்கள் குழந்தையில்லாமல் இருக்கலாம்’ என்று பேசியதோடு, ’பெண்களுக்கு ஆண் நண்பர்கள் இருப்பதால் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.’ என்று பெண்கள் குறித்து மிக மோசமாகப் பேசியிருக்கிறார் இந்த சர்ச்சை எம்.எல்.ஏ.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com