பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரசுக்கு இன்னொரு செக்... அரசமைப்பு படுகொலை நாள்!

Published on

மோடியின் மூன்றாவது ஆட்சியில் முக்கிய அறிவிப்பாக இனி ஜூன் 25ஆம் தேதி அரசமைப்புப் படுகொலை நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பு, மைய அரசின் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்திய அரசியல்சாசனத்தைக் காலில்போட்டு மிதிக்கும்வகையில், அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவந்தார். அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது அவசரநிலையைப் பிரகடனம் செய்தார்.

அடுத்த 21 மாதங்கள்வரை நீடித்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21ஆம் தேதிவரை நீடித்தது. அப்போது நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர், இடதுசாரி கட்சியினர், சனநாயக, குடிமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமாகக் கைதுசெய்யப்பட்டனர். 

சிறைகளில் ஆயிரக்கணக்கானவர்கள் சித்ரவதை செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் பெரும் மனிதவுரிமை மீறல்கள் நடைபெற்றன என்று குற்றம்சாட்டப்பட்டது. 

அப்போது, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், இன்றைய பா.ஜ.க.வின் பழைய கட்சியான ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். 

இந்தப் பின்னணியில் அண்மையில் பதினெட்டாவது நாடாளுமன்றப் பதவியேற்பின்போது, அரிதாக ஊடகங்களிடம் பேசிய பிரதமர் மோடி, அரசியல்சாசனத்தை காங்கிரஸ் கட்சிதான் மீறியது; நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தது எனக் குறிப்பிட்டிருந்தது, கவனம் பெற்றது.  

அண்மைக் காலமாக, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதே அரசமைப்பு தொடர்பாகவே காங்கிரஸ் தரப்புக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com