மணிப்பூர்: அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு தீ வைப்பு... இணைய சேவை துண்டிப்பு!

Manipur violence
மணிப்பூர் வன்முறை (மாதிரிப்படம்)
Published on

மணிப்பூரில் முதலமைச்சர் பைரன் சிங்கின் மருமகன் உட்பட மூன்று எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் வெடித்தன. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டை கும்பல் ஒன்று முற்றுகையிட முயற்சித்தது. இதனால், பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர, 3 அமைச்சர்கள், 6 சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் அந்த கும்பல் தாக்கியது. அவர்களின் சொத்துகளையும் சூறையாடியது. மேலும் 3 தேவாலயங்கள் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதிகளில் பதற்றம் தொற்றி கொண்டது. இந்த 6 எம்.எல்.ஏ.க்களில், பைரன் சிங்கின் மருமகன் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மற்றும் பிற பொருட்கள் மீது தீ வைக்கப்பட்டது. அந்த கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இதனால், இம்பால் நகரில் பல்வேறு இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்ணுப்பூர், தவுபால் மற்றும் காக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் காலவரையற்ற தடை உத்தரவை அரசு பிறப்பித்து உள்ளது. வன்முறையை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேற்று அரசு விடுமுறையை அறிவித்தது. இணையதள சேவையும் பல்வேறு இடங்களில் முடக்கப்பட்டு உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com