எச்சரிக்கை! கீழ் பர்த்தில் படுத்திருக்கீங்களா?

உயிரிழந்த அலிகான்
உயிரிழந்த அலிகான்
Published on

ஓடும் ரயிலில் படுக்கை அறுந்து விழுந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விபத்து தொடர்பாக ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அலிகான். இவர் எல்.ஐ.சி. முகவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 15ஆம் தேதி தனது நண்பர் முகமது என்பவருடன் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் செல்வதற்காக மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார்.

மறுநாள் அதிகாலை 5 மணியளவில் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் ரெயில் சென்றது. அப்போது மிடில் பெர்த் திடீரென அறுந்து, கீழ் பெர்த்தில் படுத்திருந்த அலிகான் மீது விழுந்துள்ளது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

உடனே, ரயில்வே அதிகாரிகள் அலிகானை மீட்டு வாரங்கல் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலை மோசமடைந்ததால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அலிகான் இறந்தார். அவரின் இறுதிச்சடங்கு நேற்று பொன்னானியில் நடைபெற்றது.

ரயில்கள் சரியாக பராமரிக்கப்படாததாலேயே இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,

"அலி கான் மீது விழுந்த இருக்கையை ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்ததில் அது நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், மிடில் பெர்த் உடைந்து விழவில்லை. மற்றொரு பயணி சரியாக சங்கிலியில் மாட்டாமல் சென்றதால் கீழே விழுந்தது. இதனாலேயே, கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார். இதையடுத்து சிகிச்சையில் இருந்த அவர் இறந்துள்ளார்." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com