இன்று (சனிக்கிழமை) புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் தனக்கு பேசுவதற்கு முறையான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார். ஐந்து நிமிடம் மட்டுமே பேசிய நிலையில் தான் தடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
“கூட்டத்தை புறக்கணித்து வெளியேறிவிட்டேன். சந்திரபாபு நாயுடுவுக்கு பேசுவதற்கு 20 நிமிடங்கள் தந்தனர். அசாம், கோவா, சத்திஸ்கர் முதல்வர்கள் 10-12 நிமிடம் பேசினர். ஐந்து நிமிடம் தாண்டி நான் பேச அனுமதிக்கப்படவில்லை. இது சரியல்ல. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து நான் மட்டுமே வந்திருக்கிறேன். மாநிலங்களுக்கு இடையிலான ஒன்றிய உறவு வலுவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் வந்தேன்.’’ என்ற அவர் மத்திய பட்ஜெட்டும் ஒரு தலைப்பட்சமானது என விமர்சித்தார். நிதி ஆயோக்குக்கு நிதி அதிகாரங்கள் அளிக்கவேண்டும் இல்லையெனில் பழைய திட்ட கமிஷனைக் கொண்டுவரவேண்டும் என்றார் அவர்.
ஏற்கெனவே நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதைக் காரணம் காட்டி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.