மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே கட்டமாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இன்று மாலையில் இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
மொத்தம் 288 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரத்தில், அடுத்த மாதம் 26ஆம் தேதியுடன் நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக 20ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, நவ.23ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 81 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்டில், அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதியுடன் நடப்பு அவையின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் அங்கு வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் முறையே 43, 38 தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கும் 23ஆம் தேதியன்றே வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இத்துடன், நவம்பர் 13ஆம் தேதியன்று கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியிலும் வயநாட்டிலும் வெற்றிபெற்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர் இராகுல் காந்தி, இந்த முறை வயநாட்டில் பதவிவிலகியதால் அங்கு காலியிடம் ஏற்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும்!