நாக்பூரில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் மகன் கார் விபத்தில் சிக்கியது பரபரப்பான நிகழ்வாக மாறி உள்ளது. விபத்தையும் தாண்டி அவர் சம்பவத்துக்கு முன்னால் பார் ஒன்றில் மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லையா என்ற பிரச்னை அம்மாநிலத்தில் பேசு பொருளாகி உள்ளது.
மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவராக இருப்பவர் சந்திரசேகர் பவன்குலே. இவரது மகன் சங்கேத் பன்குலே. இவருக்குச் சொந்தமான ஆடி கார் கடந்த 9 ஆம் தேதி பல வாகனங்கள் மீது தறி கெட்டு மோதியதில் இருவர் காயமடைந்தனர். பல கிமீ ஓடிய நிலையில் அந்த காரை பொதுமக்கள் பிடித்து, அதில் இருந்தவர்களை போலீசிடம் ஒப்படைத்தனர். அந்த ஆடி காரை ஓட்டி வந்த அர்ஜுன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். காரில் சங்கேத் இருந்தாலும் அவர் காரை ஓட்டவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் நடப்பதற்கு முன்னர், மதுபான விடுதி ஒன்றில் சங்கேத் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி சஞ்சய் ராவத் நேற்று முன்தினம் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை காவல் துறை மறுத்துள்ளது.
”பார் பில்லை வாங்கிப் பார்த்தோம். அதில் அவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கப்படவில்லை.” என்கிறார் டிசிபி (மண்டலம் -2) ராகுல் மட்னே.
இதுதொடர்பாக மற்றொரு காவல் துறை அதிகாரி கூறியதாவது:“சங்கேத் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் தரம்பேத் பகுதியில் உள்ள லா ஹோரி பாரில் உணவருந்தினர். அங்கு அவர்கள் மட்டன் வறுவல், சிக்கன் டிக்கா, மசாலா வேர்க்கடலை மற்றும் வறுத்த முந்திரி போன்ற சில சைவ உணவுகளை உட்கொண்டனர். மேலும் ரூ. 12000 க்கு மேல் மதிப்புள்ள இரண்டு மதுபாட்டில்களை ஆர்டர் செய்துள்ளனர்.” என்றார்.
காவல்துறைக்கு என்னென்ன வேலைகள் இருக்கின்றன பார்த்தீர்களா?