கறி சாப்பிடுவதால்தான் இமாச்சலில் நிலச்சரிவு - ஐ.ஐ.டி. இயக்குநர் அதிர்ச்சிப் பேச்சு!

ஐஐடி மண்டி இயக்குநர் பெகரா
ஐஐடி மண்டி இயக்குநர் பெகரா
Published on

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி மேகவெடிப்பு, நிலச்சரிவு உண்டாவதற்குக் காரணம், இறைச்சி சாப்பிடுவதுதான் என்று அங்குள்ள ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இமாச்சலப்பிரதேசத்தின் மாண்டி ஐஐடியின் இயக்குநர் லட்சுமிதர் பெகெரா, மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.

அந்தக் காணொலியில், அரங்கம் ஒன்றில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் முன்பாக பெகரா பேசுகிறார். அதில், நல்ல மனிதர்களாக இருக்கவேண்டும் என்றால் இறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

“ நல்ல மனிதரா இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்கும் மண்டி ஐஐடி இயக்குநர் பெகரா, பதிலையும் அவரே சொல்கிறார், இறைச்சி சாப்பிடக்கூடாது என!

அத்துடன் நிற்காமல், இறைச்சி சாப்பிட மாட்டேன் என மாணவர்களை உறுதிமொழி எடுத்துக்கொள்ளவும் அவர் சொல்கிறார்.

“ இமாச்சலப்பிரதேசத்தில் அப்பாவி விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படுமானால் மிக மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கவேண்டும். அப்பாவியான விலங்குகளை (இறைச்சிக்காக) நீங்கள் கொன்றுகொண்டு இருக்கிறீர்கள்.” என்றவர்,

“இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வது சுற்றுச்சூழல் சீர்கேட்டுடன் தொடர்புடையது. இதுவரை அதைப் பார்க்கமுடியாவிட்டாலும் இனி பார்ப்பீர்கள். பெரும் பெரும் நிலச்சரிவுகள்... மேகவெடிப்பால் ஏற்படும் பெரு மழை,... என மீண்டும் மீண்டும் ஏற்படுவதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் இறைச்சிக்காக கால்நடைகளைக் கொல்லும் கொடுமையின் விளைவுதான்... ” என்று பேசியுள்ளார்.

ஆனால், இந்தக் காணொலி எப்போது எடுக்கப்பட்டது எனும் விவரம் உறுதிப்படுத்தப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பரவிவரும் இந்தக் காணொலி குறித்து பல ஊடகங்களும் பெகராவின் கருத்தை அறிய முற்பட்டபோது, அவர் பதில் அளிக்கவில்லை.

இதனிடையே, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் நிலவியல்- சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியின் முதல்வர் பேரா. அம்ப்ரிஷ் குமார் மகாஜனிடம் ஊடகத்தினர் இதுபற்றிக் கேட்டதற்கு, ஐஐடி இயக்குநர் பற்றி குறிப்பிட அவர் விரும்பவில்லை.

“யார் சொன்னார்கள் என்பது எனக்குத் தேவையில்லை. இமாச்சலப்பிரதேச நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர் அதிகரிப்புக்கு நிலத்தியல், மனிதர்களின் காரணங்கள்தான் உள்ளன.” என்று அவர் கூறினார்.

மேலும், ” இந்த வட்டாரத்தில் புவித்தட்டுகளின் நகர்வு அதிகமாக இருக்கிறது. இங்குள்ள சூழல் அமைவானது எளிதில் உடைந்துநொறுங்கக்கூடியதாக இருக்கிறது. இத்துடன், அதிகப்படியான மழை பெய்வதால் நிலத்தின் தன்மையானது ஓர் அளவுக்கு மேல் உறுதித்தன்மையை இழந்து நிலச்சரி ஏற்படுகிறது. இது மட்டுமின்றி இந்தப் பகுதியின் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையும் அறிவியல்ரீதியான காரணமாக இருக்கிறது. இவற்றுடன் சேர்த்து, மனிதர்களால் உண்டாக்கப்படும் கட்டுமானங்கள், கழிவுகளும் மனிதர்களால் ஏற்படும் காரணங்கள்...” என்று பேராசிரியர் மகாஜன் விவரித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com