கேரளாவில், நிலச்சரிவால் பாதிப்புக்குள்ளான வயநாடு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெற்ற கடன்களை, அங்குள்ள கூட்டுறவு வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வயநாடு மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் பலர், அங்குள்ள கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். அவற்றை, தள்ளுபடி செய்துள்ளதாக கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள கேரள வங்கி அறிவித்துள்ளது.
குறிப்பாக, நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள், வீடு உள்ளிட்ட உடைமைகளை இழந்தவர்களுக்கு தாங்கள் பெற்ற கடனை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் கேரள வங்கி சார்பில், 50 லட்சம் ரூபாயும், அங்கு பணிபுரியும் வங்கி ஊழியர்கள் தங்களின் ஐந்து நாள் ஊதியத்தையும் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளனர்.