இன அடிப்படையில் வேலை...? கிளம்பிய எதிர்ப்பு... பின்வாங்கிய சித்தராமையா!

இன அடிப்படையில் வேலை...? கிளம்பிய எதிர்ப்பு... பின்வாங்கிய சித்தராமையா!
Published on

கர்நாடகாவில் தனியார் துறையில் கன்னடர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் செயல்படும் அனைத்து தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 100 சதவீத கட்டாய‌ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கன்னட அமைப்பினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கர்நாடக அரசு தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என முதல்வர் சித்தராமையாவை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா 2024'-க்கு ஒப்புதல் பெறப்ப‌ட்டது.

இந்த மசோதாவில், ‘‘கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளில் கன்னடம் தெரிந்த கர்நாட‌காவை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் நிர்வாக பிரிவில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பிரிவில் 75 சதவீதமும் கட்டாயமாக வழங்க வேண்டும். இதை மீறும் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே ஆகியோர் நேற்று மாலை முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் எம்.பி.பாட்டீல் கூறும்போது, ‘‘மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக ஆழமாக விவாதிக்கப்பட உள்ளது. தொழில் துறையினரின் கருத்துகளையும் கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா நேற்று இரவு வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘மசோதா, தொடக்க நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து, ஒப்புதல் அளித்த பிறகு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற மசோதாவுக்கு தொழில் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா நிறைவேறினால், கர்நாடகாவைவிட்டு வெளியேறுவோம் என்று சில நிறுவன‌ங்களின் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ‘திறமையின் அடிப்படையில்தான் தனியார் நிறுவனங்களில் ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. அதில் இன அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடத்தக் கோருவது நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மசோதாவை தாக்கல் செய்ய கூடாது.’ என தேசிய மென்பொருள் நிறுவன கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக அரசு இந்த மசோதனை நிறுத்தி வைத்ததற்கு அம்மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com