கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!

கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!

Published on

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ வாக்குப்பதிவு புதன் கிழமை நடைபெற்ற‌து. இதில் முன் எப்போதும் இல்லாத வகையில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் 36 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான‌ காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகளை தவிர, 918 சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 224 இடங்களுக்கு மொத்தமாக 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மை ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களைக் கடந்து காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி காங்கிரஸ் 117 இடங்களிலும் பாஜக 79 இடங்களிலும் மஜத 26 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com