போராட்டங்களுக்குத் தடை விதித்த ஜே.என்.யூ: மீறினால் 20,000 அபராதம்!

ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்கள்
ஜே.என்.யூ பல்கலைகழக மாணவர்கள்
Published on

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக கல்வி வளாகத்தில் மாணவர்கள் போராட்டம், தர்ணா போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என்றும் மீறினால் ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததுமுதல் சர்ச்சைகள் தொடர்கின்றன. குறிப்பாக, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றுவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதையொட்டி இடதுசாரி மாணவர் அமைப்புகளும் வலதுசாரி மாணவர் அமைப்புகளும் மோதிக்கொள்வதும் நடக்கிறது.

இந்த நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களின் ஒழுக்கம் – நடத்தை விதிகள் என புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இது உடனுக்குடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா என எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

அதேபோல் மதம், சாதி, இனத்தை இழிவுபடுத்துவது அல்லது தேசவிரோதக் கருத்துகளை போஸ்டராக ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றி விருந்து நடத்தினால் ரூ. 6,000, புகை பிடித்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருட்களையோ, தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களையோ வைத்திருப்பது அல்லது பல்கலைக்கழக வளாகத்துக்குள் மது அருந்துவது போன்றவற்றுக்கு ரூ. 8,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த புதிய விதிமுறைகளுக்கு மாணவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, புதிய அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com