ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா பேசிக் கொண்டிருந்தபோது, லாங்கேட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குர்ஷித் அகமது ஷேக் 370ஆவது சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்ததால் சட்டப்பேரவையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு கடந்த செப்டம்பா்-அக்டோபரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தோ்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. ஒமா் அப்துல்லா முதலமைச்சரானாா்.
இதையடுத்து, 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஜம்மு-காஷ்மீா் பேரவை திங்கள் கிழமை கூடியது. கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான நேற்று ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் தீா்மானத்தை துணை முதலமைச்சர் சுரிந்தொ் சௌதரி முன்வைத்தார்.
தீா்மானத்துக்கு காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மற்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
எதிர்க்கட்சி தலைவர் சுனில் சர்மா உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் தீா்மானத்தைக் கடுமையாக எதிர்த்தனர். தீர்மானத்தின் நகலைக் கிழித்தெறிந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பினர். கூச்சலுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று கூடிய ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான சுனில் சர்மா தீர்மானத்தின் மீது பேசிக்கொண்டிருக்கையில், லாங்கேட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் குர்ஷித் அகமது ஷேக் 370 சட்டப்பிரிவுக்கு ஆதரவான பேனரை காண்பித்தார். இதற்கு, பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமர வற்புறுத்தினார். இருந்தாலும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அவையை ஒத்திவைத்தார்.