ஜார்கண்டில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜார்கண்டில் சட்ட விரோத நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை கடந்த இரண்டு முறை சம்மன் அனுப்பியது. பல்வேறு காரணங்களைக் கூறி, இரண்டு முறையும் ஆஜராவதை ஹேமந்த் சோரன் தவிர்த்தார்.
இந்நிலையில் கடைசியாக அனுப்பப்பட்ட சம்மனில் வரும் 24ஆம் தேதி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஆனால் இந்த சம்மனுக்கு, அமலாக்கத் துறைக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “வரும் 20ஆம் தேதி முதல்வரின் இல்லத்துக்கு அமலாக்கத்துறை நேரில் வந்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக் கொள்ளலாம். அன்றைய தினம் கேள்விகளுக்கு பதிலளிக்க முதல்வர் நேரம் ஒதுக்கியுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை ராஞ்சி, காங்கே சாலையில் உள்ள முதல்வரின் அரசு இல்லத்துக்கு நேரில் வந்தனர். டெல்லியைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவினர் 3 பேரும் ஜார்க்கண்ட் குழுவினருடன் சென்றுள்ளனர்.
சட்ட விரோத நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில சமூக நலத் துறை இயக்குநராகவும், ராஞ்சியின் துணை ஆணையராகவும் பணியாற்றிய 2011ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 பேர் இதுவரை இந்த வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், ஹேமந்த சோரன் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.