ஜெகன்மோகன் ரெட்டி- சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டி- சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் எஸ்கோபர் யார்...? சந்திரபாபு நாயுடு விளாசல்!

Published on

ஜெகன்மோகன் ரெட்டியை கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபருடன் ஒப்பிட்டு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டுப் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபருடன் ஒப்பிட்டு விமர்சித்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் நடந்த கொடுமையை நான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை என்றார்.

மேலும், ’ஆந்திராவில் நடந்த சம்பவங்களை ஒரே ஒருவருடன் ஒப்பிடமுடியும் எனில் அது போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபருடன்தான் இருக்க முடியும். அவர் கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னன். பில்லியன் டாலர் போதைப் பொருளை விற்பனை செய்தவர். தன்னை எதிர்க்கும் தலைவர்கள், அரசியல்வாதிகளைக் கொலையும் செய்தார். தான் நிறுவிய மெடிலின் கார்டெல் மூலம் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார்.

போதைப்பொருள் விற்பதன் மூலம் ஒருவர் பணக்காரராக முடியும். அப்படியெனில் ஜெகன் மோகனின் நோக்கம் என்ன? டாடா, ரிலையன்ஸ், அம்பானியிடம் பணம் இருக்கிறது. அவர்களை விட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஜெகன் ஆசைப்பட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கஞ்சா இலவசமாகக் கிடைத்தது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை ஆந்திரா கஞ்சா தலைநகரமாக மாநிலமாக மாறியிருந்தது.’ என்று சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் செயற்பாட்டாளர்கள் மீது 2,560 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வழக்குகள் உள்ளவர்கள் எழுந்து நில்லுங்கள் என்று சந்திரபாபு நாயுடு கூறியதும் பெரும்பாலானோர் எழுந்து நின்றனர். அத்தனை பேர் மீதும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு வழக்குப் பதிந்தது என்பதை சுட்டிக்காட்டவும், ஜெகன் அரசில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்பதைக் காட்டவும் நிற்க சொன்னதாக சந்திரபாபு நாயுடு கூறினார்.

மேலும், ஜெகன் ஆட்சிக் காலத்தில் தலித்துகள், பெண்கள், இஸ்லாமியர்கள், விவசாயிகள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுப் பேசினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com