நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Published on

தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி வட்டாரங்களில் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை கடும் பேரிடராக அறிவித்து கூடுதல் நிதியை மைய அரசு ஒதுக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு மீது அடுக்காக கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதேபோல், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

“வெள்ள பாதிப்பிலிருந்து 42,290 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். டிசம்பர் 21ஆம் தேதி வரை 31 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக ரூ.900 கோடி மத்திய அரசு வழங்கியிருக்கிறது. தென் தமிழகத்துக்கு டிசம்பர் 12ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. மேலும், ஒவ்வொரு மூன்று மணிநேரமும் முன்னறிவிப்பு செய்துகொண்டே இருந்தது. சராசரியான மழைபெய்யக்கூடிய நிலை என்றாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் எப்போது சென்றார்கள்.

தேசிய பேரிடர் மீட்பு படை போவதற்கு முன், தமிழக அரசு அதிகாரிகள் யாராவது இருந்தார்களா...? சென்னையில், ரூ.4,000 கோடியில் 92 சதவிகித செலவழிச்சு பணிகள் முடித்திருக்கிறோம் என்று கூறிவிட்டு, வெள்ளம் வந்த பிறகு 42 சதவிகிததான் பணிகள் முடித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். பணத்தை என்ன செய்தீர்கள்? ஏன் இந்த எண்ணிக்கை மாறியது.? 92-க்கும், 42-க்கும் வித்தியாசம் தெரியாமல் கூறிவிட்டு, இன்னொரு அமைச்சர் மூலமாக வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாகக் கணித்துக் கூறவில்லை என்று சொல்கிறார்கள்.

2015ஆம் ஆண்டு அம்பத்தூர் தொழிற்சாலைகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பிறகும் என்ன கற்றுக்கொண்டீர்கள்? முதலமைச்சர் எதற்காக டெல்லியில் (இந்தியா கூட்டணி கூட்டம்) நாள் முழுக்க இருந்தார். அவரின் முன்னுரிமை எதற்கு? பேரிடர் இருக்கும்போது முதலமைச்சர் இந்தியா கூட்டணியுடன் இருக்கிறார்.

தேசிய பேரிடர் என்று அறிவிக்க ஒன்றும் இல்லை... மத்திய அரசு எதையும் தேசிய பேரிடர் என்று எப்போதும் அறிவித்ததில்லை. அந்த சிஸ்டமே இல்லை.

அவர்கள் அப்பா வீட்டு பணமா என்ற கேட்கிறவர் (உதயநிதி), அவங்க அப்பா வீட்டின்மூலம் பதவியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாரா... என்று கேட்க முடியுமா...? இந்த பேச்செல்லாம் அரசியலில் நல்லதல்ல. அவங்க தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழறிஞர். அதனால, பதவிக்கு ஏற்றவாறு நாக்கில் வார்த்தைகள் அளந்து வரணும். நிவாரண நிதியையே மக்களுக்கு ஏன் ரொக்கமாக கொடுக்கிறார்கள்.? நேரடியாக வங்கி கணக்குக்குக்கு அனுப்ப வேண்டியதுதானே..." என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com